தினத்தந்தி செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் உடைப்பு பற்றி ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை, மீண்டும் குழாய் பதிக்க அனுமதி


தினத்தந்தி செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் உடைப்பு பற்றி ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை, மீண்டும் குழாய் பதிக்க அனுமதி
x
தினத்தந்தி 10 Jun 2018 11:30 PM GMT (Updated: 10 Jun 2018 10:25 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவின் பேரில் ராயப்பன்பட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு பற்றி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. நேரில் விசாரித்தார். அப்போது மீண்டும் குழாய் பதிக்க அனுமதியளிக்கப்பட்டது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சிக்கு சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் உறைகிணறு அமைத்து அதில் எடுக்கப்படும் தண்ணீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதே போல் கோகிலாபுரம் முல்லைப்பெரியாற்றில் உறை கிணறு அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் பூமிக்கடியில் குழாய் பதித்து ராயப்பன்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

சாலையோரம் பதிக்கப்பட்டதால் அடிக்கடி குழாய் சேதம் அடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க முடியவில்லை. எனவே குடிநீர் குழாயை அங்குள்ள குளத்துக்கரையோரம் பதித்து செல்ல ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. குழாய் பதிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்கு உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் குழாய் பதிக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளத்துக்கரையோரம் குழாய் பதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் பதித்த குழாயை தோண்டி எடுத்து உடைத்தனர். நேற்றுமுன்தினம் இதுகுறித்து தினத்தந்தியில் ஊராட்சி நிர்வாகம்-பொதுப்பணித்துறை மோதல் என்று செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இந்த செய்தி எதிரொலியாக நேற்று கலெக்டர் பல்லவிபல்தேவ் இதுகுறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. சென்னியப்பன் குடிநீர் குழாய் பதித்த குளத்துக்கரை பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சிஅலுவலர் சுரேசை அழைத்து விசாரித்தார். மேலும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது ஊராட்சியின் முக்கியபணியாகும். இந்த பணிக்காக பொதுப்பணித்துறைக்கு முறையாக கடிதம் கொடுத்துள்ளனர். நீங்கள் காலதாமதம் செய்ததால்தான் குழாய் பதிக்கும் நிலைக்கு ஊராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. முக்கியத்துவம் குறித்த பணிக்காக பிற துறை சார்பில் அனுமதிகேட்டால் காலதாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து குளத்துக்கரையோரம் மீண்டும் குழாய் பதித்து செல்ல அனுமதியளித்து ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

Next Story