உத்தமபாளையம் ரேஷன் கடையில் இருதரப்பினர் மோதல்; கத்திக்குத்து- கல்வீச்சில் 4 பேர் காயம்


உத்தமபாளையம் ரேஷன் கடையில் இருதரப்பினர் மோதல்; கத்திக்குத்து- கல்வீச்சில் 4 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Jun 2018 11:00 PM GMT (Updated: 10 Jun 2018 10:26 PM GMT)

உத்தம்பாளையம் ரேஷன் கடையில் இருதரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் கல்வீச்சு, கத்திக்குத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 70 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் உள்ள புதூர் ரேஷன்கடையில் நேற்று அரிசி வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி (வயது 40) என்பவர் அரிசி வாங்க சென்றார். கடையில் விற்பனையாளராக பிச்சை (வயது 55) என்பவர் பணியில் இருந்தார். அங்கு அரிசி வினியோகம் செய்ததில் விற்பனையாளருக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்தநிலையில் ரேஷன்கடையில் நடந்த சம்பவத்தை தனலட்சுமி அவரது உறவினர் முத்துசிவராஜ் (வயது28) என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து முத்துசிவராஜ் தனது உறவினர்களுடன் ரேஷன்கடைக்கு சென்று விற்பனையாளர் பிச்சையிடம் சம்பவம் குறித்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது விற்பனையாளர் பிச்சை தரப்பினரும், முத்துசிவராஜ் தரப்பினரும் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர்.

இதில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கினார்கள். மேலும் கத்தியால் குத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது. இந்த மோதலில் முத்துசிவராஜ், முத்து ஈஸ்வரன்(27),சிவநேசன் (22), விற்பனையாளர் பிச்சை ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இருதரப்பிலும் உத்தமபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை சிலர் அந்த பகுதியில் பதுக்கி வைத்து உள்ளனர் என்றும், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒரு தரப்பினர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர். அதையொட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் அங்கு வந்து வீடுகளில் சோதனையிட்டனர். அப்போது முத்தையா என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 70 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உணவுகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story