சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு


சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 7:25 PM GMT)

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. செல்போன் பறிப்பு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் சமீப காலங்களாக செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. சாலையில் செல்போனில் பேசிக்கொண்டு செல்பவர்களை கத்திமுனையில் மடக்கி மர்மநபர்கள் திடீர் தாக்குதல் நடத்துகிறார்கள். பெரும்பாலும் பெண்களை குறிவைத்து தாக்கி செல்போனை பறித்து சென்றுவிடுகிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக புகார் வந்துள்ளது.

செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் எந்த ரூபத்தில் எப்படி வருவார்கள் என்பதை பொதுமக்களால் கணிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப்பேட்டை, அயனாவரம், புரசைவாக்கம் பகுதிகளில் மர்மநபர்கள் செல்போன்களை பறித்து சென்றனர். கோட்டை அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சரவணன் என்ற ஆட்டோ டிரைவர், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சரவணனின் செல்போனை பறித்துச்சென்றுவிட்டனர். ரோந்து போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வினோத், முத்துவீரன் ஆகிய இருவரை உடனடியாக மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர்.

அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திக் மாரிமுத்து என்பவர் நியூஆவடி சாலையில் நடந்து சென்றபோது அவரது செல்போன் பறிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செல்போனை பறித்துச்சென்றனர். அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவைச் சேர்ந்த பானு என்பவர் தனது தாயாருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பானு அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றனர்.

இதேபோல புரசைவாக்கத்தில் நீலா என்ற பெண்ணிடம் அவரது கைப்பையை 2 மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். அந்த கைப்பைக்குள் அவரது செல்போன் இருந்தது குறிப்பிடத்தக்கது. புரசைவாக்கம் மேம்பாலம் அருகே மண்ணடியைச் சேர்ந்த முகம்மதுபஷீர் என்பவர் செல்போனில் பேசியபடி நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் முகம்மதுபஷீரிடம் செல்போனை பறித்து தப்பிச்சென்றுவிட்டனர்.

செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால் போலீசார் புகாரை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செல்போன் பறிப்பு சம்பவங்களை போலீசார் சாதாரண சம்பவங்களாக கருதி உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது, உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். செல்போன் பறிப்பு சம்பவங்களில் ‘சைபர் கிரைம்’ போலீசார் உதவியோடு முன்பு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மீண்டும் ‘சைபர் கிரைம்’ போலீசார் உதவியோடு செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Next Story