கோவிலுக்கு நிலம் கொடுக்காததால் விவசாயி குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு கலெக்டரிடம் புகார் மனு
கோவிலுக்கு நிலம் கொடுக்காததால் தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருப்பதாக விவசாயி ஒருவர் கலெக்டரிடம் கோரிக்கைமனு கொடுத்துள்ளார்.
வேலூர்
வேலூர் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று மக்கள்குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காட்பாடியை அடுத்த சென்றாயன்பள்ளி கிராமத்தை சேர்ந்த முத்தன் என்பவர் தனது மனைவி சாரதா, மகன் நந்தகோபால், மருமகள் சித்ரா மற்றும் பேரன், பேத்தியுடன் வந்து கோரிக்கைமனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு சொந்தமான வீட்டுமனையை எங்கள் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கோவிலுக்கு தருமாறு கேட்டனர். அதற்கு நான் மறுத்ததால் என்னை மிரட்டினார்கள். மேலும் எங்கள் குடும்பத்தை அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர்.
பொதுவழியில் நாங்கள் செல்லக்கூடாது என்றும், விவசாயநிலத்திற்கு டிராக்டரை பொதுவழியில் ஓட்டிச்செல்லக்கூடாது என்றும் தகராறு செய்து வருகின்றனர். எனது மனைவி மற்றும் மருமகளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர்.
எனது மருமகளை மகளிர் குழுவில் இருந்தும் நீக்கிவிட்டனர். இதனால் நாங்கள் ஊரில் நிம்மதியாக வாழமுடியவில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி நாங்கள் எங்கள் கிராமத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் கூறி உள்ளார்.
விவசாயி குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story