நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அபிராமி அம்மன் திருவாசலில் வங்கக்கடல் மீன் தொழிலாளர் சங்கம், தேசிய மீனவர் பேரவை சார்பில் புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பானை 2018-ஐ கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய மீனவர் பேரவைை- ய சேர்ந்த குமரவேலு தலைமை தாங்கினார். கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மாநில உறுப்பினர் ராமச்சந்திரன், வங்கக்கடல் மீன் தொழிலாளர் சங்க சீர்காழி தொகுதி தலைவி ஸ்டெல்லா, நாகை தொகுதி தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறையால் 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018, மீனவ சமுதாய மக்கள் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரம், கடலோர நிலங்கள், அதன் சிறப்பு வாய்ந்த சுற்றுச்சூழலுக்கு நிலைப்பு தன்மையுடன் கூடிய உயிர் சூழலுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். எனவே, பாரம்பரிய மீனவர் களின் வாழ்வாதாரமாக திகழும் கடல், கடல்படுகை, ஆறு, ஆற்றுபடுகை ஆகியவற்றை வளர்ச்சி என்ற பெயரால் இந்த வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018 மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக பல திட்டங்களுக்கு திறந்து விடப்படுகிறது.

கடற்கரை சுற்றுச்சூழலையும், உயிர் சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1991-ல் கொண்டுவந்த கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையையே தோற்கடிக்கும் விதமாக இந்த 2018 வரைவு அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ள சாகர்மாலா திட்டம், நீல பொருளாதார கொள்கை மற்றும் கடலை கையகப்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018 வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018-ஐ திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story