பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்யக்கோரி சாலை மறியல்


பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்யக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:30 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்யக்கோரி இந்திய மாதர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வருகிற 20-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டியை சேர்ந்தவர் அண்ணாதாசன்(வயது 30). விவசாயி. இவருடைய மனைவி புவனேஸ்வரி(28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆலத்தம்பாடியை சேர்ந்த மகேஸ்வரிக்கும், புவனேஸ்வரிக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக ஆலிவலம் போலீசில் மகேஸ்வரி புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் திருவாரூரில் பணியாற்றும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், விட்டுக்கட்டிக்கு வந்து அங்குள்ள அண்ணாதாசனிடம், உனது மனைவி புவனேஸ்வரி எங்கே? அவர் மீதும், உன் மீதும் வழக்கு உள்ளது என கூறி அண்ணாதாசனை தாக்கியதாக தெரிகிறது.

தாக்குதல்

அப்போது அண்ணாதாசன், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனது மனைவி புவனேஸ்வரி, குழந்தையுடன் உள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த புவனேஸ்வரியை வலுக்கட்டாயமாக திருவாரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, ஒன்றிய தலைவர் தமிழ்செல்விராஜா, ஒன்றிய செயலாளர் குருமணி, ஒன்றிய துணை செயலாளர் சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புவனேஸ்வரியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

சாலை மறியல்

பின்னர் மாதர் சங்கத்தினர் கூறுகையில், விசாரணைக்கு அழைத்து சென்று ஒரு பெண் என்றும் பாராமல் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் உதைத்து சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட புவனேஸ்வரிக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தை கண்டித்து வருகிற 20-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் மற்றும் போலீஸ் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். 

Next Story