திவாகரன் புதிய கட்சி தொடங்கியது நகைச்சுவையாக உள்ளது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


திவாகரன் புதிய கட்சி தொடங்கியது நகைச்சுவையாக உள்ளது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2018 11:15 PM GMT (Updated: 11 Jun 2018 9:43 PM GMT)

திவாகரன் புதிய கட்சி தொடங்கியது நகைச்சுவையாக உள்ளது என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, உதயமார்த்தாண்டபுரம், எடையூர் சங்கேந்தி உள்ளிட்ட இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.

முன்னதாக முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தில்லைவிளாகத்தில் உள்ள ராமர் கோவில், ஜாம்புவானோடை தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். ஜாம்புவானோடையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடத்திக்கொண்டு இருப்பவர்கள், யாருக்கோ கைகட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு நடைபெற்று வருகிறது. இவர்களுடைய ஆட்சியை விரும்பாத 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியே வந்தனர்.

கட்சி நலனுக்காக தியாகம் செய்துள்ள இவர்கள் அனைவரும் இன்றைக்கே ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.

தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர். மன்னார்குடி திவாகரன் புதிய கட்சி தொடங்கியது நகைச்சுவையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர் அய்யாத்தேவர், நகர செயலாளர் லக்கி நாசர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story