புதிய வெங்காய மண்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள் தர்ணா பணி பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் முறையீடு


புதிய வெங்காய மண்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள் தர்ணா பணி பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் முறையீடு
x
தினத்தந்தி 12 Jun 2018 4:30 AM IST (Updated: 12 Jun 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பழைய பால்பண்ணையில் இயங்கும் புதிய வெங்காய மண்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணிபாதுகாப்பு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து கலெக்டரிடம் முறையீடு செய்தனர்.

திருச்சி,

திருச்சி சப்-ஜெயில் ரோட்டில் இயங்கி வரும் வெங்காய மண்டி வியாபாரிகளுக்காக, புதிதாக திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய வெங்காய மண்டி வளாகம் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த வெங்காயமண்டி வளாகத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்த னர். புதிய வெங்காய மண்டி திறப்பதற்கு முன்பாக அங்கு 2014-ம் ஆண்டு 7 ஆயிரம் சதுர அடியில் ஒரு ஷெட் அமைத்து அங்கு கூடுதலாக வரும் வெங்காய மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டது. அதற்காக மூட்டை இறக்கும் பணிக்கு, சப்-ஜெயில் ரோட்டில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வரமறுத்து விட்டதாகவும், அந்த இடத்தில் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி புதிதாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சப்-ஜெயில் ரோட்டில் உள்ள தொழிலாளர்கள், புதிதாக திறக்கப்பட்ட வெங்காய மண்டியில் மீண்டும் நாங்களே சுமைகளை ஏற்றி இறக்குவோம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சுமைதூக்கும் கூலி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க திரண்டு வந்தனர்.

அப்போது அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் கந்தன் தலைமையில் பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தங்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.

அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி சப்-ஜெயில் ரோட்டில் சுமைதூக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரு பிரிவினர், புதிதாக தொடங்கப்பட்ட வெங்காய மண்டியில் தாங்களே சரக்குகளை ஏற்றி, இறக்குவோம் என வியாபாரிகளை மிரட்டியும், மார்க்கெட்டை முற்றுகையிட்டும், கூலி தொழிலாளர்களை அச்சுறுத்தியும் வருகிறார்கள். மேலும் எங்களை வெளியேற வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனால், புதிய வெங்காய மண்டியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அங்கு பணியாற்றி வரும் 171 சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் பணிபாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதை உணர்கிறோம். எனவே, சுமைதூக்கும் தொழிலாளர்களான எங்களுக்கும், வியாபாரிகளுக்கும், சில்லரை வணிகர்களுக்கும் உரிய பணிபாதுகாப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஆவன செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story