கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 57 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 57 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:44 PM GMT)

பெரம்பலூர் அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 57 பவுன் நகை, ரூ.2லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). இவர் பெரம்பலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக உள்ளார். இவரது மனைவி சாந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாண்டியன் தனது 2 மகன்களுடன் அரணாரையில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பாண்டியன் தனது 2 மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, பெரம்பலூரில் உள்ள அலுவலகத்துக்கு சென்று விட்டார்.

பாண்டியனின் மனைவி இறந்ததால், பாண்டியனின் அக்கா கணவர் சேகர் மாலை நேரங்களில் பாண்டியன் வீட்டுக்கு வந்து குப்பை அள்ளுவது உள்ளிட்ட சிறு, சிறு வேலைகளை செய்து வந்தார். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் பாண்டியனின் குழந்தைகளையும், சேகர் கவனித்து கொள்வது வழக்கம். இதே போல் நேற்று மாலை சேகர் வழக்கம்போல் பாண்டியன் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அங்குள்ள கண்ணாடி கதவில் கண்ணாடி உடைந்து துண்டு துண்டாக சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் பாண்டியனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பாண்டியன் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் பீரோ அருகே இருந்த கட்டிலில் பொருட்கள் சிதறிகிடந்தன. மற்றொரு அறையில் உள்ள பீரோ அருகே தரையில் பொருட்கள் சிதறி கிடந்தன.

ஆனால் 2 பீரோக்களின் சாவிகளும் பீரோவில் அப்படியே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த பாண்டியன் 2 பீரோக்களை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த நகை-பணம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அலமாரியில் இருந்த நகைகளும் திருடு போயிருந்தது.

இதுகுறித்து பாண்டியன் உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு பாண்டியனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாண்டியன் தனது வீட்டில் 2 பீரோ மற்றும் அலமாரியில் இருந்த மொத்தம் 57 பவுன் நகை, ரூ.2 லட்சம், 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மர்மநபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து, அதன் வழியாக வீட்டிற்குள் குதித்து கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்றதும், பின்னர் அறைகளில் இருந்த பீரோக்களை திறந்து, அதில் இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களையும், மேலும் அலமாரியில் இருந்த நகைகளையும் திருடி விட்டு ஓட்டை பிரித்து வந்த வழியாகவே வெளியே சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் சீட்டா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டின் உள்ளே இருந்து ஓடி அரணாரை மெயின் ரோடு அருகே போய் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பாண்டியன் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனால் பாண்டியன் வீட்டின் முன்பு ஏராளமான பொது மக்கள் திரண்டு நின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story