செந்துறை அருகே பரபரப்பு ரெயில் மோதி மோட்டார் சைக்கிள் எரிந்தது


செந்துறை அருகே பரபரப்பு ரெயில் மோதி மோட்டார் சைக்கிள் எரிந்தது
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:44 PM GMT)

செந்துறை அருகே ரெயில் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதனால் ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகளுக்கு பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை ரெயில் நிலையத்திற்கும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே பெரியாக்குறிச்சி பகுதியில் ஒரு ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் நீக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இந்த சுரங்கப்பாதையை கடந்துதான் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்களது ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் இந்த தண்ணீரை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அந்த வழியே சென்று உள்ளனர்.

சுரங்கப்பாதை அருகே வந்த போது அளவுக்கு அதிகமான தண்ணீர் இருந்ததால் பாதையை கடக்க அச்சமடைந்தனர். இதனால் சுரங்கப்பாதை அருகே அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு ரெயில் தண்டவாளத்தை கடக்க சென்றனர்.

அப்போது மதுரையில் இருந்து சென்னைக்கு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடினர். அதிவேகமாக வந்த ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜினில் சிக்கி மோட்டார் சைக்கிள் நொறுங்கி சிதறியதில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அந்தத்தீ ரெயில் என்ஜின் மற்றும் அதற்கு பின்னால் இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் ரெயிலில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பெரியாக்குறிச்சியில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

ரெயில் விருத்தாசலம் சென்றதும் டிரைவர் நடந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் எரிந்த மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளை தண்டவாளத்தில் விட்டுச்சென்ற வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மோட்டார் சைக்கிளின் வாகன பதிவு எண்ணை வைத்து விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் செந்துறை பகுதியை சேர்ந்த அன்பழகனுக்குரியது (வயது25) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story