சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்


சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:45 PM GMT (Updated: 11 Jun 2018 10:38 PM GMT)

சோமனூர் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கோவை,

கோவை மாவட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

வெள்ளலூரில் 90 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் 25 ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. நொய்யல் ஆற்றில் இருந்து வரும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக குளத்துக்கு தண்ணீர் வருவது தடைபட்டு உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும், அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் குளத்துக்கு தண்ணீர் வருவதே கேள்விக்குறியாக இருக்கிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், குளத்துக்கு தண்ணீர் திறக்க முடியாமல் இருக்கிறது. எனவே நடவடிக்கை எடுத்து, வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் சிறுத்தைப்புலி, கரடி போன்று வேடமிட்டு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாளியூர், போளுவாம்பட்டி, செம்மேடு, மத்தியபாளையம், தீத்தி பாளையம், எட்டிமடை, வால்பாறை, சிறுமுகை, லிங்காபுரம் உள்பட வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டு பன்றிகள், காட்டெருமைகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. குறிப்பாக சிறுத்தைப்புலிகள், கரடிகள், செந்நாய் விவசாயிகள் மற்றும் ஆடு, மாடுகளை தாக்கி வருகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. வனத்துறையில் போதிய ஊழியர்கள் மற்றும் நவீன கருவிகள் கொண்ட வாகனங்கள் இல்லாத காரணத்தால், ஊருக்குள் புகுந்த வனவிலங்குகளை துரத்த காலதாமதம் ஏற்படுகிறது. எனவே போதிய வன ஊழியர்கள் மற்றும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் துரத்த நவீன கருவிகள் கொண்ட வாகன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோமனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

சோமனூர் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் இறந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு மருத்துவ செலவே ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து கூடுதல் இழப்பீடு கேட்டு மனு கொடுத்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து படுகாயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், அவர்களுக்கு மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைசாவடி தடுப்பணை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சித்திரைசாவடி தடுப்பணையில் இருந்து பிரிந்து வரும் வாய்க்காலில் பாசன வசதிக்காக 32 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்க்காலில் ஏராளமான கிளை வாய்க்கால்களும் உள்ளன. இதன் மூலம் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. தற்போது கிளை வாய்க்கால்களில் முட்புதர்கள் வளர்ந்து இருப்பதுடன், குப்பைகள் தேங்கி அடைத்து உள்ளன.

இதனால் திறந்து விடும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை. உடனடி நடவடிக்கை எடுத்து, விவசாய விளை நிலங்களுக்குள் செல்லும் கிளை வாய்க்கால்களை அளவீடு செய்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எஸ்.டி.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து விட்டதால், ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சமாக ரூ.35–ம், கிலோ மீட்டருக்கு ரூ.18 என்று உயர்த்தி கட்டணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story