தாறுமாறாக ஓடிய வேன் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகாயம்


தாறுமாறாக ஓடிய வேன் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:41 PM GMT (Updated: 11 Jun 2018 10:41 PM GMT)

சேலம் பெரியார் மேம்பாலத்தில் முன்பக்க டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய வேன் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு அண்ணா பூங்கா வழியாக வேன் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பெரியார் மேம்பாலத்தில் சென்ற போது வேனின் முன்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

அப்போது அந்த வேன் எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதி பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து நின்றது. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் வேன் டயரின் அடியில் சிக்கியது. வேனின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கோகுல்(வயது 28), சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் கோகுல் சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு பேட்டரி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

சதீஷ்குமாருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. புதுமாப்பிள்ளையான இவர் உறவினரை பார்க்க சென்ற போது இந்த விபத்தில் சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் பெரியார் மேம்பாலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story