ஊட்டி கிடங்கில் அனுமதி மறுப்பு: கூடலூரில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ஊட்டி கிடங்கில் அனுமதி மறுத்ததால் கூடலூரில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் நகராட்சி பகுதியில் சராசரியாக தினமும் 4 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகளை கொட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரிக்க கிடங்கு அமைக்கப்பட வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு செளுக்காடி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கிடங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனால் கூடலூர் அருகே சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் நிலத்தில் தற்காலிகமாக குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகள் 2 லாரிகளில் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்காத குப்பைகளை மறுசூழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான எந்திர வசதி உள்ளது.
இந்த நிலையில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் கூடலூர் பகுதியில் உள்ள மக்காத குப்பைகளை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தது. 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மக்காத குப்பைகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் கூடலூர் நகராட்சி லாரிகள் திருப்பி கொண்டு வரப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் ஊட்டி கிடங்கில் குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் கூடலூர் நகரில் கடந்த 2 தினங்களாக குப்பைகள் அகற்றப்பட வில்லை. மேலும் முக்கிய இடங்களில் குப்பைகள் நாளுக்குநாள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அகற்றப்படாத குப்பைகளில் இருந்து கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் குப்பைகளில் உள்ள கழிவுகளை தின்பதற்காக தெருநாய்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகள் கொட்டும் பிரச்சினையில் அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.