சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது - த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர்


சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது - த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர்
x
தினத்தந்தி 12 Jun 2018 4:21 AM IST (Updated: 12 Jun 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என சேலத்தில் த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது சேலம்-சென்னை இடையே அமைய உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை கைது நடவடிக்கை செய்வதை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக த.மா.கா இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் ஒரு மனு அளித்தனர்.

இதுகுறித்து யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் தொழில்வளர்ச்சி, நகர வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கனவே இரும்பாலை, மேக்னசைட் சுரங்க தொழில், கல்லூரிகள் என பல்வேறு வகைக்காக சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, விவசாயம் அடியோடு அழிந்து போய் உள்ளது. இந்த நிர்வாக ஏற்பாட்டில் விவசாயி குடும்பங்கள் ஒரு சதவீதம் கூட பலன்பெறவில்லை. யாருக்கும் வேலைவாய்ப்போ, சுய தொழில் ஏற்பாடுகளோ செய்து தரப்படவில்லை. இதற்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக 500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது.

இதேபோல் ஆத்தூர், உளுந்தூர்பேட்டை வழியாக சென்னைக்கு சாலை இருக்கும் நிலையில் 8 வழி பசுமை சாலை தேவையற்றது. இந்த திட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன் லட்சக்கணக்கில் விளைநிலங்கள் அழிக்கப்படும். இந்த சூழ்நிலையில் இருக்கும் மீதி விவசாய நிலங்களையும் வளர்ச்சியின் பெயரால் அர்ஜிதம் செய்யக்கூடாது. மேலும் பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை கைது செய்வோம் என அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story