மாவட்ட செய்திகள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி வந்து மனு கொடுத்த பொதுமக்கள் + "||" + People in the eyes of black clothes were asked to come and petition

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி வந்து மனு கொடுத்த பொதுமக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி வந்து மனு கொடுத்த பொதுமக்கள்
தனியார் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி வந்து மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஈரோடு அருந்ததியர் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வீரகோபால், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்பட பொதுமக்கள் சிலர் கண்களில் கருப்பு துணி கட்டி ஊர்வலமாக மனு கொடுக்க வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு, தனியார் பள்ளிக்கூடங்களில் இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி முறையாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின்னர் அவர்கள் மனு கொடுக்க சென்றனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் 18 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களை இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும். இது முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களை புறக்கணிக்கும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு ஆர்.என்.புதூர் மாயவரம் அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாயவரம் பவானி ரோட்டில் வசித்து வந்தோம். அங்கு வசிக்கக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதால் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறினோம். அங்கு தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. குடியிருப்பு பகுதியில் வி‌ஷப்பாம்புகள் அதிகமாக வருகின்றன. எனவே மின் விளக்குகள் அமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வினோபாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கிணறு அமைத்து அதிக திறன் வாய்ந்த மின்மோட்டார் மூலமாக ராட்சத குழாயில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதிகமான தண்ணீர் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படுவதால் எங்கள் பகுதியில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே தண்ணீர் எடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மொடக்குறிச்சி அருகே உள்ள குரங்கன் வாய்க்கால்கரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், ‘‘மொடக்குறிச்சி, எழுமாத்தூர், ஈஞ்சம்பள்ளி, புஞ்சைகாளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குவது குரங்கன்வாய்க்கால். இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது’’, என்று கூறி இருந்தனர்.

பெருந்துறை அருகே முருங்கத்தொழுவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராலும், புகையாலும் சுற்றுப்புறம் மாசுபடுகிறது. எனவே ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றும், ராஷ்ட்ரீய இந்து பரி‌ஷத் அமைப்பின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘கோவில்களில் தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத கோவில்களின் முன்பு தீபம் ஏற்றி போராட்டம் நடத்தப்படும்’’, என்றும் கூறப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா, கடன் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 212 பேர் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதில் 2 பேருக்கு தலா ரூ.1,500 மதிப்பிலான இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஜெயராமன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் எஸ்தர்சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும்; தாசில்தாரிடம் மக்கள் ஒற்றுமை இயக்கம் மனு
ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என தாசில்தாரிடம், மக்கள் ஒற்றுமை இயக்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.
4. இந்து முன்னணியினர் –பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரம்: இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு
ஊதியூரில் தனியார் நிறுவனம் பால்பண்ணை கட்டும் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியினர்–பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5. நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்; பெரியார் பேரவை கவர்னரிடம் மனு
சிறையில் வாடும் நளினி உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் பெரியார் பேரவை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.