கீழக்கரை அருகே இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்த முயற்சி படகு உரிமையாளர் கைது
கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக படகு உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கீழக்கரை,
கீழக்கரை பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் போன்றவை கடத்தப்பட்டு வருவதாக அடிக்கடி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி தலைமையில் போலீசார் கடலோர பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காஞ்சிரங்குடி அருகே இடிந்தகல் கடற்கரையில் ஒரு படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த பண்டல்களை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் 225 பெட்டிகளில் 1 லட்சத்து 49 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன.
இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். இந்த மாத்திரைகள் அதிக போதை தன்மை உடையதாகும். இதுதொடர்பாக படகின் உரிமையாளர் செங்கல் நீரோடையை சேர்ந்த செல்வம் மகன் இருளாண்டி(45) என்பவரை போலீசார் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.