கடற்கரை மேலாண்மை அறிவிப்பு ஆணையை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கடற்கரை மேலாண்மை அறிவிப்பு ஆணையை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 5:00 AM IST (Updated: 12 Jun 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரை மேலாண்மை அறிவிப்பு ஆணையை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன் சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வரைவு கடற்கரை மேலாண்மை அறிவிப்பு ஆணையை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் பால்ச்சாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் காசிலிங்கம், கருருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜோசப் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மீனவ சமுதாய மக்கள் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதார, கடலோர நிலங்களை அதன் சிறப்பு வாய்ந்த சுற்றுச்சூழலுக்கு நிலைப்பு தன்மையுடன் கூடிய உயிர் சூழலுக்கு முற்றிலும் எதிரானது. பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழும் கடல், கடல் படகை, ஆறு, ஆற்றுப்படுகை ஆகியவற்றை வளர்ச்சி என்ற பெயரால் இந்த புதிய அறிவிப்பு ஆணை மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக பல திட்டங்களுக்கு வழி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.

கடற்கரை சுற்றுச்சூழலையும், உயிர் சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1991–ல் கொண்டு வந்த கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணையை ஒட்டு மொத்தமாக தோற்கடிப்பது இந்த அறிவிப்பு ஆணை. சாகர்மாலா திட்டம், நீல பொருளாதார கொள்கை மற்றும் கடலை கையகப்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை வடிவமைக்கப்பட்டுஉள்ளது.

எனவே மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், கடல் சார்ந்த உரிமையை பாதிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்களும், மீனவ பெண்களும் கலந்து கொண்டனர்.


Next Story