ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 110 பேர் கைது
ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் 110 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
திருப்பூர்
பா.ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணியின் வடக்கு தொகுதி சார்பில் மத்திய அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க இருசக்கர ஊர்வலம் நேற்று நடத்த திட்டமிடப்பட்டிரு ந்தது. கலெக்டர் அலுவலக வாசலில் இருந்து குமரன்சிலை வரை செல்லும் இந்த ஊர்வலத்திற்கு போலீசாரின் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஊர்வலத்தை நடத்த அவர்கள் முடிவுசெய்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் கூடினார்கள். இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு திருப்பூர் தெற்கு தொகுதி அமைப்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் பிரதீப், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பா.ஜனதா கட்சியினர் 110 பேரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story