சென்னை–சேலம் பசுமை சாலைக்கு எதிராக மக்கள் பெயரில் நக்சல்கள் போராட்டம் நடத்துகின்றனர் எச்.ராஜா பேட்டி
சென்னை–சேலம் பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெயரில் நக்சல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
காரைக்குடி,
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது, காங்கிரசும், தி.மு.க.வும் தான். இவர்கள் விவசாயிகளை ஏமாற்றி நாடகமாடுகின்றனர். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டது. ஆனால் இன்றுவரை கர்நாடக அரசு தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை. தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
உலகிலேயே ஊழல் அதிகமான மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய தயங்கி, வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். சேலம்–சென்னை இடையே பசுமை எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெயரில் நக்சல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு ஆரம்பத்திலேயே தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர்களை கைதுசெய்ய வேண்டும்.
சிலர் அரசியல் களத்தில் இருந்துகொண்டே மாவோயிஸ்டுகளாக செயல்படுகின்றனர். சாலை கூடாது என்கின்றனர். தொழிற்சாலை வேண்டாம் என்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சேலம் மற்றொரு தூத்துக்குடியாகிவிடும். தேச விரோதிகளான அவர்களிடம் இருந்து நாட்டை காக்க தேச பக்தியுள்ள ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு வேகப்படுத்தப்படும். தேச விரோதிகளான இவர்கள் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு வன்முறை களமாக தமிழ்நாட்டை மாற்றுகின்றனர்.
முடிந்துவிட்ட விஷயத்தை மீண்டும் கிளறுவதுபோல் கமல்ஹாசன், கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமியை சந்தித்து காவிரி பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார். அவரது செயல் கண்டிக்கத்தக்கது.