அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு
அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பா.ஜனதா கட்சியினர் கொடுத்த மனுவில் “தாராபுரம் அமராவதி ஆற்றுப்பகுதியில் இரவும், பகலும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தாராபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
வீரபாண்டி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “ எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் தனியார் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கொண்ட வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் இருந்து வருகிற சாக்கடை உள்ளிட்ட கழிவுநீரை தெருவில் நேரடியாக திறந்து விடுகிறார். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
அவினாசி தாலுகா ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் வெள்ளிரவெளி கஸ்பா கிராம மக்கள் கொடுத்த மனுவில் “எங்கள் பகுதியில் சுடுகாடு பகுதியில் வீடுகள், குப்பை கிடங்குகள் அமைத்து சுடுகாடு பகுதியினை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கல்லாகுளம் சுடுகாடு பகுதியை சீரமைத்து தர வேண்டும்.
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “ எங்கள் பகுதியில் பெரும்பாலான இந்துக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story