சிவகாசி செங்கமலப்பட்டியில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி தர வேண்டும்
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்,
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
சிவகாசி செங்கமலப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
செங்கமலப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில்தெரு, அருந்ததியர் தெரு ஆகிய பகுதிகளில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் வசித்து வரும் பலதரப்பட்ட சமுதாய மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது. ஆனால் எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. தற்போது 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். பஞ்சாயத்து செயலாளிடம் மனு கொடுத்தால் நிதியில்லை என்று கூறுகிறார்.
இதே போன்று எங்கள் பகுதியில் சுகாதார வளாகம் ஏதும் இல்லாததால் திறந்து வெளியை தான் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதியில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, சமுதாய கூடம் ஆகியவை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.