மகனை கொலை செய்த வழக்கில் கைதான கதாசிரியர் சவுபா மரணம்


மகனை கொலை செய்த வழக்கில் கைதான கதாசிரியர் சவுபா மரணம்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:45 PM GMT (Updated: 11 Jun 2018 11:45 PM GMT)

மதுரையில் மகனை கொலை செய்த வழக்கில் கைதான கதாசிரியர் சவுபா மரணமடைந்தார்.

மதுரை,

மதுரை கோச்சடை, டோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சவுபா என்ற சவுந்தரபாண்டி (வயது 55). பிரபல பத்திரிகையாளரான இவர் சீவலப்பேரி பாண்டி படத்தின் கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

இவருடைய மனைவி லதாபூர்ணம், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதாபூர்ணம் தனியாக கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

இவர்களுடைய மகன் விவின்(25). போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் சவுபாவுக்கும், அவரது மகன் விவினுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த சவுபா, விவினை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சவுபா உள்பட 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்த சவுபாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலை மேலும் மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story