தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் ரூ.160 கோடி கடன் வழங்க இலக்கு


தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் ரூ.160 கோடி கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 13 Jun 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ரூ.160 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக பொது மேலாளர் கூறினார்.

ஈரோடு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் விழா நேற்று முன்தினம் ஈரோடு பெரியார் நகர் 80 அடி ரோடு சிதம்பரம் காலனியில் உள்ள ‘டிக்’ கிளை அலுவலகத்தில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று புதிய தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் தொழில் கடன்கள் குறித்த கருத்தரங்கம் ஈரோட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை மண்டல மேலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சென்னை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக பொது மேலாளர் (திட்டம்) டி.கிருபாகரன் கலந்து கொண்டு தொழில் கடன் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே தொழில் கடன் பெற்று வெற்றியாளர்களாக இருக்கும் இளம் தொழில் முனைவோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஈரோடு கிளை மேலாளர் எஸ்.காதம்பரி தலைமையில் அதிகாரிகள் செய்து இருந்தனர்.

இளம் தலைமுறை தொழில் முனைவோர்கள் புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், ஏற்கனவே நடத்தி வரும் தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்யவும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.160 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இயந்திர தளவாடங்கள் பெற்று, புதிய தொழிற்சாலைகள் தொடங்க மட்டும் ரூ.29 கோடி வழங்கப்பட உள்ளது. அபிவிருத்திக்கான மூலதனக்கடன் ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு சார்ந்த நிறுவனங்களின் திட்டங்கள் நிறைவேற்ற ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இதுவரை ரூ.31 கோடியே 31 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

எனவே தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டு விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்கள் உரிய திட்ட அறிக்கை மற்றும் கடன் திட்டத்தொகை குறித்த விவரங்களுடன் நேரில் வந்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு கடன் வழங்கப்படும்.

இந்த முகாமில் விண்ணப்பம் செய்தால் பரிசீலனை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த கடன் திட்டங்கள் அனைத்தும் ஒற்றை சாளர முறைப்படி நடப்பதால் விண்ணப்பதாரர்களுக்கு அலைச்சல் ஏதும் இன்றி ஒரே அலுவலகத்தில் கடன் கிடைக்கிறது.

தொழில் கடன் பெற்று முறையாக கடனை குறித்த காலத்தில் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த, கூடுதல் வைப்பு ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ஏற்கனவே பெற்றதை விட கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தக்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாம் தமிழ்நாடு முதலீட்டுக்கழக கிளை அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

Next Story