சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற கர்நாடக வாலிபர் உள்பட 2 பேர் கைது
சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற கர்நாடக வாலிபர் உள்பட 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, மான், கரடி, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட், வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் செல்வக்குமார் மற்றும் வன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உள்பட்ட வடவள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்தப்பகுதியில் வேன் மற்றும் மோட்டார்சைக்கிள் நின்று கொண்டு இருந்தது. ஆனால் யாரும் அங்கு இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என்று வனப்பகுதிக்குள் சென்று தேடினார்கள்.
அப்போது சிறிது தூரத்தில் வனப்பகுதிக்குள் 3 பேர் நின்றுகொண்டு இருந்தனர். வனத்துறையினரை கண்டதும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கி கொண்டனர். ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே சந்தனபாளையம் பகுதியை சேர்ந்த அபிர்காம் சின்னப்பா (வயது 28) மற்றும் பவானிசாகர் அருகே உள்ள பெஜலட்டி பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பதும், அவர்கள் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும்’ தெரிந்தது.
இதைத்தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக முருகன் மற்றும் அபிர்காம் சின்னப்பாவை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், வனவிலங்குகளை பிடிக்க பயன்படும் சுருக்கு கம்பி மற்றும் அவர்கள் வந்த வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள சந்தனபாளையத்தை சேர்ந்த ராபர்ட் பெரியநாயகம் பிரிட்டோவை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் மாவட்ட வன அதிகாரி அருண்லால், முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்துக்காக முருகன், அபிர்காம் சின்னப்பா ஆகிய 2 பேரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்று மாவட்ட வன அதிகாரி அருண்லால் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story