தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்கள் விவசாய பணிகள் தொடக்கம்


தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்கள் விவசாய பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:00 PM GMT (Updated: 12 Jun 2018 7:07 PM GMT)

மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனையொட்டி விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததுடன், கிராமப்புறங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலத்தில் இருந்து அவ்வப்போது கோடை மழை பெய்து மக்களை குளிரச் செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது கடந்த சில தினங்களாக காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி, குன்றக்குடி, புதுவயல், சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினந்தோறும் காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் சில மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள கொத்தரி, பலவான்குடி, பாதரக்குடி உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள வறண்டு கிடந்த கண்மாய்களில் தற்போது நீர் வரத்து அதிகரித்து விவசாயம் பணி தொடங்கும் அளவிற்கு உள்ளது.

இதையடுத்து தரிசாகி சீமைக்கருவேல மரங்கள் மண்டிக்கிடந்த விவசாய நிலங்களை விவசாயிகள் சீரமைக்கும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர். காரைக்குடி அருகே கொத்தரி பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு மழையில்லாமல் கடும் வெயில் அடித்ததால் எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது. இந்த ஆண்டு அதற்கு மாறாக பெய்த பலத்த மழை காரணமாக இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகின்றன. இதனால் தரிசாகி போன விவசாய நிலங்களை உழவு செய்து, குறுகிய கால சாகுபடி நெல் பயிரை பயிரிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.


Next Story