மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கொள்ளையடிக்க முயன்றவர் கைது
சிவகங்கையை அடுத்த ரோஸ்நகரில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த ரோஸ்நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக ஜெயபால்(வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஜெயபால் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு, விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். சிவகங்கை–தொண்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அருகில் அவர் வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜெயபால் மீது மிளகாய் பொடியை தூவினர். பின்னர் அவர் வைத்திருந்த பணத்தை அந்த நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் ஜெயபால் சத்தம்போட்டார். அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடிவரவே, கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கையை அடுத்த பனங்காடியை சேர்ந்த சஞ்சீவ்குமார்(22) என்பவரை கைதுசெய்தார். மற்ற 2 பேரை தேடிவருகிறார்.