வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள நிலுவைத்தொகை பேச்சுவார்த்தை இழுபறி


வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள நிலுவைத்தொகை பேச்சுவார்த்தை இழுபறி
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 7:45 PM GMT)

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத்தொகைக்கான பேச்சுவார்த்தை இழுபறியானது.

கோவை,

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2002–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டு வரையிலான சம்பள நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று கோவையில் உள்ள தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தோட்ட அதிபர்கள் சங்க ஆலோசகர் ராம்குமார், செயலாளர் பிரதீப்குமார், உட்பிரியார் கம்பெனி துணைத்தலைவர் பாலச்சந்தர், அய்யர்பாடி கம்பெனி நிர்வாகி மகேஷ்நாயர், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாகியும், கூட்டு கமிட்டி தலைவருமான வால்பாறை அமீது, சுந்தர்ராஜன், செல்லமுத்து (எல்.பி.எப்), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.), கேசவமருகன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வர்கீஸ்(ஆனைமலை தொழிலாளர் சங்கம்), எர்வர்டு (இந்திரா காங்கிரஸ்) ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஆண்டு நிலுவை தொகை ரூ.1800 வீதம் வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரூ.1600–க்கு தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொண்டனர். ஆனால் தோட்ட அதிபர்கள் ரூ.1000 வீதம் தான் வழங்க முடியும் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்தது.

சென்னையில் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் விசாரணையின் போது, தொழிற்சங்கம் சார்பில் இந்த பிரச்சினைக்கு முடிவு காண ஒருமாத கால அவகாசம் கேட்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story