பூரண மதுவிலக்கு கோரி போராட்டம் திருநாவுக்கரசர் அறிவிப்பு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் மாநில தலைவர் திருநாவுகரசர் கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் சங்கர்கணேஷ் வரவேற்று பேசினார். கமிட்டி பொறுப்பாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
சேலம்– சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தில் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அபகரிக்க முயல்வது மக்கள் விரோத போக்கு ஆகும். சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகம்,. மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மோடி ஆட்சியில் மத்திய அரசின் சார்பிலோ, மாநில அரசின் சார்பிலோ எந்த தொழிலும் தொடங்கவில்லை, குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் பூரண மது விலக்கு அமல்படுத்த காங்கிரஸ் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும். மணல் கொள்ளைக்கு தமிழக அரசு உடந்தையாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
முன்னதாக அவர் நேரு பவனத்தில் செல்பட்டு வரும் காங்கிரஸ் அலுவலகத்தில் மறைந்த ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியன் உருவ படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.