காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக இனி ஆணையம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்


காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக இனி ஆணையம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:15 PM GMT (Updated: 12 Jun 2018 8:40 PM GMT)

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக இனி ஆணையம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று திருவாரூரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் பா.ஜனதா கட்சியின் பிற்படுத்தபட்டோர் நலப்பிரிவின் சார்பில் காவிரி டெல்டா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பசுமை சாலை திட்டம் ஒரு வரப்பிரசாதம் இதனை வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்த கால கட்டத்திலும் இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர தயாராக இல்லை. தற்போது இந்த திட்டத்தை தடுக்க பொய் புரட்டுகளை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியில் சிறிதும் அக்கறை இல்லை என்பது தெரியவருகிறது. காவிரி விவகாரத்தை பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. காவிரியில் நீர் திறப்பு தொடர்பாக இனி ஆணையம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். காவிரி ஆணையத்துக்கான பிரதிநிதியை கர்நாடகம் இதுவரை தரவில்லை. அதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள முதல்-அமைச்சர் குமாரசாமி ஆட்சியை வலியுறுத்த வேண்டும்.

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசை பொறுத்தவரை, தமிழகத்துக்கு முல்லை பெரியாறு அணையில் 142 அடியை உறுதி செய்து கொடுத்துள்ளது. 150 ஆண்டு கால பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்திற்காக முயற்சித்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் இந்த திட்டங்கள் வந்தாலும் அதனை வரவேற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் திட்டங்கள் வரக்கூடாது என எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலை திட்டம் பல ஆண்டுகளாக தி.மு.க.வால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடமையாற்றுவது இல்லை. வெளிநடப்பு செய்யும் நோக்கத்தோடு தனக்கு ஒதுக்கப்படாத நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஊடகங்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஊடக வாதத்தின்போது தவறாக கருத்துக்களை தெரிவிப்பவர்களை உடனடியாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் தடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பிற்படுத்தபட்டோர் நலப்பிரிவின் மாநில துணை தலைவர் பெரோஸ் காந்தி, மாவட்ட தலைவர் பேட்டைசிவா உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story