3 பெண்களிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


3 பெண்களிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jun 2018 10:15 PM GMT (Updated: 12 Jun 2018 8:41 PM GMT)

நொய்யல் பகுதியில் 3 பெண்களிடம் 18 பவுன் தாலி சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாலதி(வயது 29). இவர் நொய்யல் அருகே உள்ள புகழூர் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை புன்னம்சத்திரம்- வேலாயுதம்பாளையம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அதியமான்கோட்டை செல்லும் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டு இருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மாலதியின் ஸ்கூட்டரின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாலதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

இதேபோல் நொய்யல் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னுசாமி மனைவி ருக்மணி(45). இவர் ஓலைப்பாளையம்- புன்னம்சத்திரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். கரியாம்பட்டி சுடுகாடு அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ருக்மணி அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஓலப்பாளையம் ஓ.கே.ஆர்.நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி சரஸ்வதி(55). இவர் புன்னம்சத்திரம் அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள தனது மகள் பூங்கொடியை பார்ப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து 3 பேரும் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நொய்யல் பகுதியில் ஒரே நேரத்தில் 3 பெண்களிடம் தாலி சங்கிலிகளை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story