திருச்சி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இந்திய மாணவர் சங்கத்தினர் கைது


திருச்சி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2018 4:30 AM IST (Updated: 13 Jun 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாகவும், கட்டணத்திற்கான ரசீது எதுவும் தரப்படுவது இல்லை எனவும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் பாலக்கரையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை போராட்டம் நடத்த சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அருணன் தலைமையில் நிர்வாகிகள் மரக்கடை அருகே நேற்று காலை கூடினர். இதனால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர் சங்கத்தினர் மரக்கடையில் இருந்து ஊர்வலமாக முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி அருகே போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன், மாணவர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட செல்ல புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக தூக்கி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story