மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம் சாலை தடுப்பு கம்பியில் மோதி போலீஸ்காரர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம் சாலை தடுப்பு கம்பியில் மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2018 4:30 AM IST (Updated: 13 Jun 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது.

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் அலெக்ஸ் (வயது 29). இவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மெட்டில்டா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் பணிக்கு சென்ற ஜான்சன் அலெக்ஸ் மாலை 6 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் மனைவிக்கு போன் செய்து ராம்ஜிநகர் அருகே உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியுள்ளார்.

அதன்படி நண்பரை பார்த்துவிட்டு ராம்ஜிநகரில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மணிகண்டம் போலீஸ் நிலையம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மணிகண்டம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

இதைத்தொடர்ந்து ஜான்சன் அலெக்ஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பொன்மலைப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஜான்சன் அலெக்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story