மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் போலீசாரை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல் + "||" + The owner of the jewelery shoppers protesting against the police at Perambalur

பெரம்பலூரில் போலீசாரை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல்

பெரம்பலூரில் போலீசாரை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல்
பெரம்பலூரில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் பால் கூட்டுறவு சங்க செயலாளர் பாண்டியன் வீட்டில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே சென்ற மர்ம நபர், அங்கிருந்து 57 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவைகளை திருடி சென்றனர். இது குறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த வெங்கடேசனை (வயது 24) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பெரம்பலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வரும் கல்யாண் நகரை சேர்ந்த பாலையாவிடம் (50), குறைந்த தொகைக்கு திருடிய நகைகளை விற்பனை செய்ததாகக் கூறி, பெரம்பலூர் கடைவீதியில் உள்ள அவரது கடையை வெங்கடேசன் போலீசாருக்கு அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் நேற்று அதிகாலை பாலையாவின் வீட்டிற்கு சென்று அவரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள் சிலர், பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, முறையான பதில் அளிக்காமல், அவர்களை தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள், பெரம்பலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பாலையாவை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கடைகளை அடைத்து தேரடி வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கடைவீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூரில் நேற்று போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் அடைக்கப்பட்டதால் கடை வீதி வெறிச்சோடி இருந்தது.