கடலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி


கடலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி
x
தினத்தந்தி 13 Jun 2018 4:00 AM IST (Updated: 13 Jun 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணியை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர்

தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி கடலூரில் நடந்தது. பேரணியை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது, 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது.

குழந்தைகள் உரிமை காப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மேதை ஆக்குங்கள், வேலைக்கு அனுப்பி பேதை ஆக்காதீர்கள் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியானது டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு பாரதிசாலை வழியாக சென்று அண்ணா விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. அங்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக கையெழுத்து இயக்கம் மற்றும் துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது தொடர்பான ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

பேரணியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம், கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமுகம், சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் மற்றும் தொழிலாளர் துறை சார்நிலை பணியாளர்கள், குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story