தாயை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது


தாயை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2018 4:00 AM IST (Updated: 13 Jun 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுக்காததால் தாயை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கணியூர்,

கணியூர் அருகே புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுக்காததால் தாயை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் கணியூர் அருகே உள்ள துங்காவியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 42). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன்கள் சூர்யபிரகாஷ் (20) மற்றும் சத்திய மூர்த்தி(19). இதில் சூர்ய பிரகாஷ் எந்த வேலைக்கு போகாமல் அடிக்கடி மது குடித்து விட்டு, மகேஸ்வரியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுக்கும்படி தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

ஏற்கனவே வாங்கிக்கொடுத்த மோட்டார் சைக்கிளை சூர்யபிரகாஷ் வேகமாக ஓட்டிச்சென்றதில் விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே மீண்டும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுக்கும்படி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சூர்யபிரகாஷ், தனது தாய் மகேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தராத உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கோபத்தில் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் மகேஸ்வரியை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாசை கைது செய்தனர். புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுக்காததால் தாயை இரும்பு கம்பியால் மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story