மாவட்ட செய்திகள்

வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம் - வியாபாரிகளுடன் வாக்குவாதம் + "||" + Resistance to the emergence of vegetables from outsiders: Farmers struggle - argue with traders

வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம் - வியாபாரிகளுடன் வாக்குவாதம்

வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம் - வியாபாரிகளுடன் வாக்குவாதம்
வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகள், பல்லடம், அவினாசி, பொங்கலூர், தாராபுரம், காங்கேயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனைத்து வித காய்கறிகள் மற்றும் தக்காளி ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அந்த வகையில் இங்கு தினசரி சுமார் 350 டன் காய்கறிகள், 50 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவற்றை இடைத்தரகர்கள் மொத்தமாக வாங்கி உழவர் சந்தைக்கு வெளியிலும், தென்னம்பாளையம் சந்தைக்குள்ளும் கடை போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் உழவர் சந்தைக்கும், தென்னம்பாளையம் சந்தைக்கும் காய்கறிகள் கொண்டுவரும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் காய்கறிகள் சரியாக விற்பனையாகாததாலும், உரிய விலை கிடைக்காததாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி தலைமையில், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் தென்னம்பாளையம் மார்க்கெட்டின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளிகள் மற்றும் காய்கறிகள் வேன்களில் மூடி கொண்டுவரப்பட்டதை கண்டறிந்து வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இனிமேல் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில காய்கறிகளை தென்னம்பாளையம் சந்தைக்குள் கொண்டு வரக்கூடாது என்று எச்சரித்தனர்.

இதனால். வாகனங்கள் மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாமலும், வெளியே வரமுடியாமலும் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டதால் அங்கு சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்றனர். பின்னர் இந்த பிரச்சினை குறித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, சுங்கம் ஏலம் எடுத்தவருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.