தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:30 PM GMT (Updated: 12 Jun 2018 9:44 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே போதுமான அளவு சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தில் சாய ஆலைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த சாய ஆலைகளில் துணிகளுக்கு சாயமேறும் பணியில் பல்வேறு விதமான ரசாயனங்கள், நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் நிலை சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் சாயக்கழிவுநீரின் காரத்தன்மை சீராக்கும் பணியில் இந்த ஆசிட் பயன்படுகிறது.

மேலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர சல்ப்யூரிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் சாய ஆலைகளிலும் சல்ப்யூரிக் ஆசிட் முக்கிய மூலபொருளாக இருந்து வருகிறது. திருப்பூரில் உள்ள 18 பொது சுத்திகரிப்பு மையங்கள், தனியார் சுத்திகரிப்பு மையங்கள், சாய ஆலைகள் உள்ளிட்டவைகளுக்கு மாதம் தோறும் 1,100 டன் அளவு சல்ப்யூரிக் ஆசிட் தேவைப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து சாய ஆலை சுத்திகரிப்பு துறையினர் சல்ப்யூரிக் ஆசிட் கொள்முதல் செய்தனர். ஒரு டன் சல்ப்யூரிக் ஆசிட் ரூ.3,500-ஆக இருந்தது. தாமிரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் சுத்திகரிப்பின் போது இந்த சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்த ஆசிட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு டன் சல்ப்யூரிக் ஆசிட் 16 ஆயிரத்து 800-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சாய ஆலை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

திருப்பூர் சுத்திகரிப்பு மையம், சாய ஆலைகளுக்கு தேவையான சல்ப்யூரிக் ஆசிட்டை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மொத்த விலையில் வர்த்தகர்கள் கொள்முதல் செய்து திருப்பூர் சாய ஆலைகளுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் திருப்பூர் சாய ஆலை நிறுவனங்களின் தேவைக்காக வெளிமாநிலங்களில் இருந்து சல்ப்யூரிக் ஆசிட் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடும் தட்டுப்பாடு காரணமாக ரூ.3500-ஆக இருந்த ஒரு டன் சல்ப்யூரிக் ஆசிட் விலை ரூ.16 ஆயிரத்து 800-ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆசிட் இல்லாவிட்டால் சுத்திகரிப்பு மற்றும் சாயமேற்றும் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், விலை அதிகமாக இருந்தாலும் கட்டாயம் அவற்றை வாங்கி உபயோகப்படுத்த வேண்டிய நிலைக்கு சாய ஆலை நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். சாய ஆலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில் சல்ப்யூரிக் ஆசிட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மேலும் எங்களை கவலையடைய செய்துள்ளது. பின்னலாடை தொழிலின் நலன் கருதி தேவையான அளவு சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story