சென்னை-பாலக்காடு ரெயிலில் கடத்தப்பட்ட 460 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


சென்னை-பாலக்காடு ரெயிலில் கடத்தப்பட்ட 460 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 13 Jun 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-பாலக்காடு ரெயிலில் கடத்தப்பட்ட 460 கிலோ ரேஷன்அரிசியை திண்டுக்கல்லில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

சென்னையில் இருந்து திண்டுக்கல், பழனி வழியாக பாலக்காட்டுக்கு தினமும் காலையில் அதிவிரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, கரூர் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை கரூருக்கு வந்த, பாலக்காடு ரெயிலில் போலீசார் சோதனை செய்தனர்.

இதில் அனைத்து பெட்டிகளிலும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைகளுக்கு அடியில் சாக்கு மூட்டைகள், பைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் அந்த ரெயில், கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு விட்டது. எனவே, திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ரெயிலில் பாதுகாப்புக்காக வந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே போலீசார் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தயாராக நின்றனர். இதற்கிடையே காலை 6 மணிக்கு சென்னை-பாலக்காடு ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்தது. உடனே குறிப்பிட்ட முன்பதிவில்லா பெட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 9 பைகள், 25 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 460 கிலோ ரேஷன்அரிசி இருந்தது.

இதையடுத்து அந்த ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன்அரிசி கடத்தி வந்தவர்கள் குறித்து, அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாமக்கல்லில் வைத்து ரேஷன் அரிசியை சிலர் ரெயிலில் ஏற்றியதாக பயணிகள் தெரிவித்தனர். எனினும், கடத்தியவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

மேலும் பாலக்காட்டுக்கு செல்லும் ரெயில் என்பதால், அந்த ரேஷன்அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக திண்டுக்கல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story