முழு நேர அலுவலர் இல்லாததால் மூடப்பட்டு கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்
ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.
ஜோலார்பேட்டை,
பெரியகம்மியம்பட்டு, காவேரிப்பட்டு கல்லாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்களை இந்த அலுவலகத்தின் மூலம் பெற்று வந்தனர். இந்த நிலையில் நாட்டறம்பள்ளி புதிய தாலுகா பிரிக்கும்போது, பெரியகம்மியம்பட்டு பகுதியில் உள்ள குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலகம் பெரியகம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் குடியானகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
அங்கு பணியாற்றிய கிராம நிர்வாக அலுவவர் வெலக்கல்நத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஜங்கலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் கிராம நிர்வாக அலுவலகம் சரிவர திறப்பதில்லை. எப்போதும் மூடியே கிடக்கிறது.
சான்றிதழ் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரியகம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவகத்துக்கு முழுநேர கிராம நிர்வாக அலுவலரை நியமிப்பதோடு, பெயர் பலகையிலும் பெரியகம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் என மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.