குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின மனித சங்கிலி கலெக்டர் பங்கேற்பு


குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின மனித சங்கிலி கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Jun 2018 10:50 PM GMT (Updated: 12 Jun 2018 10:50 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின மனித சங்கிலி கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது.

வேலூர்,

குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12–ந்தேதி உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின மனித சங்கிலி நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க திட்ட இயக்குனர் ராஜபாண்டியன், மாவட்ட துணை நீதிபதி ராஜசிம்மன், மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் மாதவன், இணை இயக்குனர் (தொழிலக பாதுகாப்பு) முகமதுகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி வரவேற்றார்.

மனித சங்கிலியில் குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள், சைல்டு லைன் அமைப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ அமைப்பினர், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தாமரைமணாளன், உதவி இயக்குனர் (வேலை வாய்ப்புத்துறை) ராமநாதன், சைல்டு லைன் இயக்குனர் வெங்கட்ராமன், ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கர்) வாகனங்களில் ஒட்டினார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ராமன் பரிசுகளை வழங்கினார். குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பின்னர் குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அதனை அரசு ஊழியர்கள் அனைவரும் பின்தொடர்ந்து வாசித்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டேன். குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற பாடுபடுவேன் என்ற வாசகம் அடங்கிய பதாகையில் கலெக்டர் ராமன் கையெழுத்திட்டார்.



Next Story