பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை


பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 12:07 AM GMT (Updated: 13 Jun 2018 12:07 AM GMT)

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று(புதன்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக விஜயகுமார் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டு இருந்தார். அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் விஜயகுமார் கடந்த மே மாதம் 4-ந் தேதி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 11-ந் தேதி(நேற்று முன்தினம்) ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி களத்தில் இருக்கிறார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. அக்கட்சி காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது. அதன்படி அன்றைய தினம் தேர்தல் நடந்தது. இதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த கல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(புதன்கிழமை) நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கு முன்பு தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஓட்டுகள் எண்ணும் பணி மொத்தம் 14 சுற்றுகள் நடைபெற உள்ளது.

உள்ளே அனுமதி இல்லை

ஓட்டு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு யார் யாருக்கு எத்தனை ஓட்டுகள் கிடைத்துள்ளன என்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உடனுக்குடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஓட்டு எண்ணும் மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயநகர் தொகுதியை பொறுத்தவரையில் அந்த தொகுதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜனதா வசம் இருக்கிறது. பா.ஜனதாவிடம் இருந்து அந்த தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையின் அக்கட்சியின் எண்ணிக்கை 105 ஆக உயரும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதன் பலம் 79 ஆக அதிகரிக்கும். யார் வெற்றி பெற்றாலும் ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story