புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 12:27 AM GMT (Updated: 13 Jun 2018 12:27 AM GMT)

கூடுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் வண்டலூர், ஊரப்பாக்கம், ஊனைமாஞ்சேரி, கொளப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, கீரப்பாக்கம், அருங்கால், காட்டூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், மாடம்பாக்கம், ஆதனூர், பெருமாட்டுநல்லூர், கிளாம்பாக்கம், அய்யஞ்சேரி, உள்பட 44 கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொத்து சம்பந்தப்பட்ட விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் திருமணப்பதிவு போன்றவைகளும் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

தற்போது இயங்கி வரும் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இடம் ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்து திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் இருக்கிறது.

புதிதாக கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய அலுவலகத்தை அதிகாரிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டும், தொடர்ந்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசுக்கு மாதம், மாதம் தேவையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட பத்திரப்பதிவு அதிகாரிகள் மிக விரைவில் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story