மாவட்ட செய்திகள்

புரோட்டா கடை தம்பதிக்கு அரிவாள் வெட்டு: சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு2 வாலிபர்கள் கைது + "||" + Cut the scythe to the proto shop couple: Shoppers in Suthamalli

புரோட்டா கடை தம்பதிக்கு அரிவாள் வெட்டு: சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு2 வாலிபர்கள் கைது

புரோட்டா கடை தம்பதிக்கு அரிவாள் வெட்டு: சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு2 வாலிபர்கள் கைது
சுத்தமல்லியில் புரோட்டா கடை நடத்தி வரும் தம்பதியை அரிவாளால் வெட்டியதை கண்டித்து சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினார்கள்.

பேட்டை, 

சுத்தமல்லியில் புரோட்டா கடை நடத்தி வரும் தம்பதியை அரிவாளால் வெட்டியதை கண்டித்து சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினார்கள். அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கணவன்–மனைவிக்கு அரிவாள் வெட்டு

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஜாகீர் (வயது 54). இவருடைய மனைவி பானு (45). இவர்கள் சுத்தமல்லி விலக்கு பகுதியில் பிரியாணி, புரோட்டா கடை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இவரது கடைக்கு ஒருவர் வந்து 6 சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றார்.

பின்னர் பார்சல் வாங்கி சென்றவருடன் ஒரு கும்பல் ஜாகீரின் கடைக்கு வந்து பிரியாணி பார்சலில் சிக்கன் குறைவாக இருந்ததாக கூறி தகராறு செய்தனர்.

திடீரென்று அந்த கும்பல் அரிவாளால் ஜாகீர், அவருடைய மனைவி பானு ஆகியோரை வெட்டி விட்டு, அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடையடைப்பு–2 பேர் கைது

இந்த நிலையில் அந்த தம்பதியை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சுத்தமல்லியில் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுத்தமல்லி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி விசுவநாதநகரைச் சேர்ந்த வரதராஜன் மகன் சபரி (வயது 25), பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் முத்து என்ற சுடலைமுத்து (27) ஆகிய 2 பேரை சுத்தமல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.