தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்


தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2018 2:45 AM IST (Updated: 13 Jun 2018 8:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மீன்பிடிக்க அனுமதி கோரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விசைப்படகு 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் உள்ளன. இங்கு உள்ள விசைப்படகு மீனவர்கள் தங்குகடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மீன்வளத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 18–ந் தேதி விதியை மீறி 163 விசைப்படகுகளில் சென்று தங்கு கடல் மீன்பிடித்தனர். இதனால் 163 விசைப்படகு மீனவர்களும் ஒரு மாதம் கடலுக்கு செல்ல தடை விதித்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகுகளில் 71 படகுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தன. பதிவு செய்யப்படாத மற்ற படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பின்னர் விசைப்படகு உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது 20 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட படகுகளை மத்திய கப்பல்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனால் விசைப்படகுகள் பதிவு செய்வதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் மத்திய கப்பல் துறை உதவியுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி 

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்கள் விசைப்படகுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும், இன்று(வியாழக்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் உடனடியாக தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் உதவி இயக்குனர் சிவராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் மனம் உடைந்த விசைப்படகு உரிமையாளரான தூத்துக்குடி தொம்மையார் கோவில் தெருவை சேர்ந்த கென்னடி (வயது 45) என்பவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த போலீசார் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் கென்னடியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம் 

இதைத்தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்களின் குடும்பத்தினரும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதனால் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.

Next Story