திண்டிவனத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 735 லிட்டர் எரிசாராயம் பறிமுதல், 5 பேர் கைது
திண்டிவனத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 735 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் பகுதியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைசாமி மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திண்டிவனம்–மரக்காணம் ரோடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 கேன்களில் மொத்தம் 385 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர் கீழ்எடையாளம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மனைவி தனலட்சுமி (வயது 49), டிரைவர் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அய்யனார் (36) என்பதும், அவர்கள் எரிசாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தனலட்சுமி, அய்யனார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 385 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், பிரம்மதேசம் சப்–இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் திண்டிவனம்–சலவாதி கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் 350 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து எரிசாராயம் கடத்தி வந்ததாக திண்டிவனம் அவரபாக்கத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மருகன் (37), ராவணாபுரம் சொக்கலிங்கம் மகன் தாமோதரன் (51), பொன்னுசாமி மகன் ஆறுமுகம் (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், 350 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் நேற்று மொத்தம் 735 லிட்டர் எரிசாராயத்தை கடத்தியதாக 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.