மாணவர்கள் கடத்தப்படுவதாக ‘வாட்ஸ் அப்’பில் தகவல்: பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் பிள்ளைகளை அழைத்து சென்றனர்


மாணவர்கள் கடத்தப்படுவதாக ‘வாட்ஸ் அப்’பில் தகவல்: பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் பிள்ளைகளை அழைத்து சென்றனர்
x
தினத்தந்தி 14 Jun 2018 4:15 AM IST (Updated: 14 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே மாணவர்கள் கடத்தப்படுவதாக ‘வாட்ஸ்அப்’ மூலம் பரவிய தகவலால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சிறுமுறை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு தலைமை ஆசிரியர் செல்வராசு மற்றும் 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவித்தனர்.

இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்துக்குள் சென்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் இங்கிருந்து மாணவர்கள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் வருகின்றன. எனவே பிள்ளைகளை அழைத்து செல்ல வந்தோம் என்று கூறினர்.

உடனே பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராசு, அங்கே திரண்டு நின்ற மாணவர்களின் பெற்றோரிடம் மாணவர்களை யாரும் கடத்தி செல்லவில்லை. வாட்ஸ்அப்பில் வந்த தகவல் வதந்தி, அனைவரும் திரும்பி செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை பெற்றோர் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

மாணவர்கள் அனைவரும் சென்று விட்டதால் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தார். பின்னர் இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் சிறுமுளை பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story