கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை


கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 13 Jun 2018 11:15 PM GMT (Updated: 13 Jun 2018 6:56 PM GMT)

கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதையொட்டி நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

கடலூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.

கடலூர் கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சுரேஷ்(வயது 36), ராம்குமார்(26) ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்திலும் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ருட்டி பணிக்கன்குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடை மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் சூறையாடப்பட்ட சி.என்.பாளையம் டாஸ்மாக் கடையை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் சேதமடைந்த டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டு, இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுப்பதற்காகவும் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காகவும் நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் கடலூர் வந்தார். தொடர்ந்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இதுபோன்ற வன்முறையில் கட்சி நிர்வாகிகள் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் ஐ.ஜி. ஸ்ரீதர் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வன்முறையாளர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற வன்முறை சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை ஐ.ஜி.ஸ்ரீதர் வழங்கினார். அதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம்பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக் கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மர்மநபர்களால் தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த அரசு பஸ்சையும் வடக்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story