மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை: திருப்பூர் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை: திருப்பூர் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 7:05 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

திருப்பூர்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளும் நிரம்பி வருகின்றன. திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பூரையொட்டி உள்ள மாவட்டமான கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நொய்யல் ஆறு உருவாகும் மலையான சிறுவாணி மற்றும் வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நொய்யல் மற்றும் அதன் கிளை ஆறுகளில் நேற்று திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவையின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, திருப்பூர் வழியாக பாய்ந்து கரூர் மாவட்டம் பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

நொய்யல் ஆற்றில் நேற்று திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திருப்பூர் பாரப்பாளையம், அணைப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலம் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாக்கடைநீர், சாய கழிவு நீர் பாய்ந்து ஓடுவதை பார்த்து பழக்கப்பட்டுப்போன பொதுமக்கள், நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் குடும்பம் குடும்பமாக வந்து வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்தனர். காரில் சென்றவர்களும் காரை நிறுத்தி விட்டு, ஆற்றை பார்வையிட்டனர்.

மேலும் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், வெள்ளம் இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு நேரம் ஆற்றில் நீரின் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பார்வையிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

இதற்கிடையே திருப்பூர் பாரப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக இந்த தரைப்பாலத்தின் மீது 2 அடி உயரத்திற்கு தண்ணீர் பேரீரைச்சலுடன் செல்கிறது. அப்போது அந்த தரைப்பாலம் வழியாக 25 வயது வாலிபர் ஒருவர் சாகசம் செய்தவாறு பாலத்த கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார். அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அந்த வாலிபரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சரியான நேரத்தில் அந்த வாலிபர் மீட்கப்பட்டதால், உயிர் தப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நொய்யல் ஆற்றின் நீர் வரத்தை அதிகாரிகள் இடைவிடாமல் கண்காணித்து வருகிறார்கள். நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story