ராமநாதபுரம் அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
ராமநாதபுரம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் அரிவாளுடன் வியாபாரி சரண் அடைந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை தெற்கூர் பகுதியை சேர்ந்த பொன்னுக்கிளி என்பவருடைய மகன் சிவா என்ற சிவக்குமார்(வயது 22). சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய பெரியப்பா கோவிந்தன். இவருடைய மகள் கண்ணகி என்பவரை அதேபகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் இளநீர் வியாபாரி வைத்தீஸ்வரன்(24) கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இதுதொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுஉள்ளது.
இந்த தகராறு காரணமாக சிவக்குமாரின் தந்தை பொன்னுக்கிளி அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் கடந்த ஆண்டு வைத்தீஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு சிவக்குமார்தான் காரணம் என்று வைத்தீஸ்வரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி சென்னையில் இருந்து சிவக்குமார் ஊருக்கு வந்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் அவரை பழிவாங்க திட்டமிட்டார். இதன்படி நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிவக்குமார் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வைத்தீஸ்வரன் வாலிபர் சிவக்குமாரை பின்பக்கமாக பிடித்து இழுத்து, தான் வைத்திருந்த அரிவாளால் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இந்நிலையில் சிவக்குமாரை பழிதீர்த்த ஆத்திரம் தீர்ந்த நிலையில் வைத்தீஸ்வரன் அரிவாளுடன் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தீஸ்வரனை கைது செய்தனர். வாலாந்தரவை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன் மற்றொரு வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.