குடிநீர் வழங்காததை கண்டித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வெளிநடப்பு
குடிநீர் வழங்காததை கண்டித்து திருப்பாலைக்குடியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் திருப்பாலைக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சமால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். திருப்பாலைக்குடி கிழக்கு தெரு தலைவர் ஷாஜகான் கனி, தெற்குத்தெரு சுதீர்தீன், வடக்கு தெரு சீனி உமர், முன்னாள் கிழக்கு தெரு முகமது உமர் பாரூக், விவசாய சங்க தலைவர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஊராட்சி செயலர் மாணிக்கம் தங்களுக்கு தவறான தகவல் அளிப்பதாகவும், நோட்டில் கையெழுத்து போட வேண்டும் என்று கூறி அழைத்து வந்து தற்போது சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்துவதாகவும், கூட்டத்துக்கு முன்னதாகவே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மக்களை ஏமாற்றி கையெழுத்து வாங்குவதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் இந்த பகுதியில் கடந்த 5 மாதமாக குடிநீர் வரவில்லை என்றும், இதற்கு குழாய் அமைக்க கிராம பணத்தை வழங்கியும் இன்னும் குடிநீர் வழங்காமல் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் ஊராட்சி செயலர் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர். பின்பு கிராம தலைவர் சமயலிங்கம் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். மேலும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கவும், காந்திநகர் மாரியம்மன் கோவில் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.